கம்ப்யூட்டர் பராமரிப்பு செய்வது எப்படி?

how to maintain a computer
கம்ப்யூட்டர்.

இது இல்லாத இடமில்லை. பயன்படுத்தாதவர்கள் இல்லை. கணினி மட்டுமில்லை.. எந்த ஒரு பொருளும் அப்படித்தான். எதுவும் நம் கைக்கு வரும் வரைக்குதான் எல்லாம் அதிக எதிர்பார்ப்பு. அது வந்த பிறகு, அதைப்பற்றிய அக்கறை, எதிர்பார்ப்பு எல்லாமே குறைந்துவிடும். கம்ப்யூட்டர் மட்டும் என்ன விதி விலக்கா?.


வீட்டிற்கு வந்த ஒரு பத்து நாட்கள் வரை அதை துடைப்பதும், மென்மையாக கையாள்வதும் தொடரும். காரணம் அது புதியது. நிறம் மறாமல் அழுக்கு அண்டாமல் "பளிச்" என வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு இருக்கும். நாளடைவில் "கழுதைகெட்டு குட்டிசுவர்" ஆன கதைதான்.

இந்த கதையெல்லாம் எதற்கு? சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லிவிட்டு நடையை கட்ட வேண்டியதுதானே என்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும் ஒரு கட்டுரை என்றால் அதற்கு தொடர்பான ஒரு முன்னுரை தேவைபடுகிறது. அதனால்தான் மேற்சொன்ன கதை.

சரி, பதிவிற்குள் நுழையலாம். கம்ப்யூட்டர் பராமரிப்பது எப்படி? இது கூட எங்களுக்குத் தெரியாதா? என்பது கேட்பது எனக்கும் புரிகிறது. ஆனால் நூற்றில் 99% சதவிகிதம் பேர் அதை பராமரிப்பதில் காட்டும் சுணக்கம் மிக அதிகம். கம்ப்யூட்டர் மட்டுமில்லை.

அது தொடர்பான சொந்தங்கள் லேப்டாப், டேப்ளட், கையடக்க திறன்பேசி போன்றவைகளும் கூட தான். முறையாக பராமரிப்பு இல்லாத இதுபோன்ற மின்னணு கருவிகள் நாம் எதிர்பாராத நேரத்தில், அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் செயலிழந்து போய், நம்மை பயங்கர டென்சனில்(?) கொண்டு வந்து விட்டுவிடும்.

எனக்கு சில முறை அதுபோல ஆகியதுண்டு. அதனால்தான் இந்த கட்டுரை. முறையாக பராமரிக்கப்படும் எந்த ஒரு சாதனமும் அவ்வளவு எளிதில் பழுதாவதில்லை.


கம்ப்யூட்டர் பரிமரிப்பு:


கம்ப்யூட்டர் பராமரிப்பு என்று எடுத்துக்கொண்டாலே, அதை இரண்டு வகையாக பிரித்து பராமரிப்பது அவசியம். ஒன்று வன்பொருள். இரண்டு மென்பொருள்.

வன்பொருள் பராமரிப்பதை நாமே சுலபமாக செய்துவிடலாம். மென்பொருள் பராமரிப்பும் ஏறக்குறைய அப்படிதான். எல்லாமே சுலபமாக செய்துவிடலாம். தேவை கொஞ்சம் பொறுமை மட்டும்தான்.

வாரம் ஒருமுறை அல்லது இருவாரங்களுக்கு ஒருமுறை, அல்லது குறைந்த பட்சம் ஒரு மாத த்திற்கு ஒருமுறையாவது கணினினை பராமரிப்பதற்கான கால அளவை வைத்துக்கொள்ள வேண்டும்.

தினசரி செய்ய வேண்டியவைகள்:


முதலில் வெளிப்புற சுத்தம் முக்கியம். ஒரு உலர்ந்த துணியை (பனியன் கிளாத்) எடுத்துக்கொண்டு கணினித்திரை, கீபோர்ட், சிபியூ போன்ற கணினியின் பகுதிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசிகளை துடைத்தெடுக்க வேண்டும். இதை தினமும் செய்தாலே, கணினிக்குள் செல்லும் தூசி, குப்பைகளை தடுத்திடலாம்.

வாரம் ஒருமுறை செய்ய வேண்டியவை:


இது உள்ளிருக்கும் ஒரு வேலைதான். டிக்ஸ் கிளீனிங்-டிஸ்க் ஸ்கேனிங் வாரம் முறை செய்திட வேண்டும்.
ரீசைக்கிள் பின் கிளீன் செய்திட வேண்டும். (நானெல்லாம் உடனுக்குடன் செய்து முடித்துவிடுவேன்)
தேவையற்ற ஃபைல்களை (டாகுமெண்ட், வீடியோ, ஆடியோ, போட்டோஸ்) நீக்க வேண்டும்.
ஆன்ட்டி வைரஸ் அப்டேட் செய்யவும்.
கணினியை முழுமையாக ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்யவும்.
ஒரு வாரத்திற்குள் நிறைய ஃபைல்களை பயன்படுத்தியிருந்தால் Disk Defragment செய்யவும்.

இவைகள் அனைத்தையும் வாரத்திற்கு முறை கட்டாயம் செய்ய வேண்டும்.

மாதம் ஒரு முறை செய்ய வேண்டியவைகள்: 


தேவையில்லாத மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்திருந்தால், அவற்றை நீக்கிவிடவும்.
கணினிக்கான மின் இணைப்புகளை அகற்றி விட்டு, மீண்டும் நன்றாக இணைக்கவும்.
விசைப்பலகையை தூய்மை செய்யவும். குறிப்பாக விசைகளுக்கு அடியில் படியும் அழுக்குகளை அதற்கென உள்ள பிரஸ் கொண்டு தூய்மை செய்யவும்.
மறக்காமல் மௌசின் அடி பாகத்தில் படிந்துள்ள மெழுகு போன்ற அழுக்குளை நீக்கி தூய்மை படுத்தவும்.
மறக்காமல் மாதம் ஒருமுறை ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை அப்டேட் செய்யவும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டியவை


டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை வேறு டிரைவிற்கு மாற்றவும்.
சி டிரைவை கிளீன் செய்யவும்.
முடிந்தால் அதை பார்மட் செய்துகொள்ளவும்.
சிபியூ கிளீனிங் செய்யவும்.
பாஸ்வேர்டுகளை மாற்றி அமைக்கவும்.

வருடம் ஒருமுறை செய்ய வேண்டியவைகள் 

கணினியில் உள்ள மென்பொருட்களின் உரிமத்தை (License) புதிப்புத்துக்கொள்ள வேண்டும்.
ஹார்ட் டிரைவில் உள்ள பேக்கப்பை பரிசோதித்து, அதிலுள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கிவிட வேண்டும்.

இவ்வாறு கணினியை நாள், வாரம், மாதம், ஆண்டு கணக்குகளில் பகுதி பகுதியாக குறிப்பிட்ட வேலைகளை தவறாமல் செய்து முடித்தால், கட்டாயம் கணினியில் ஏற்படும் பிரச்னைகளை குறைக்கலாம்.

இதனால் கணினியும் தேவையில்லாத பாரங்களை சுமக்காமல் மிக எளிமையாக இருக்கும். இதனால் கணினி பழுது அடைவது குறையும். எந்த ஒன்றையும் நாம் பராமரிப்பதில்தான் அதில் ஏற்படும் சிக்கல்களின் அளவும் வரையறுக்கப்படும். எனவேதான் கணினி பராமரிப்பு மிக அவசியமாகிறது. 

Post a Comment

0 Comments